Weather Update: இன்றையை பகல் நேரத்தில் பெரிய அளவில் மழை இருக்காது என, தனியார் வானிலை நிபுணரான தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு வெதர்மேன் டிவீட்:


தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வட தமிழ்நாட்டின் மேல் மேகம் பெரிய பந்து போல் திரண்டு உள்ளதால் சென்னையில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இன்று ஒரு ஆரம்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், பகல் நேரத்தில் இடைவெளி இருக்கும். இரவு முதல் அதிகாலை வரை எப்போதும் உச்சக் காலங்கள் தான் (காற்றழுத்த தாழ்வுப்பகுதி நம்மை நெருங்கும்போது மட்டுமே நாள் முழுவதும் மழை பெய்யக்கூடும்) இன்று இடைவேளையுடன் மழை இருக்கும். மழை பெய்தாலும் பாதுகாப்பாக அலுவலகம் செல்லலாம். சூரியன் பகலில் சிறிது சிறிதாக வரலாம், பின்னர் திடீரென மறையலாம். அக்டோபர் 16 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் 16/17 அன்று மிக கனமழைக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே குழந்தைகள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் இன்று பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்லலாம் ” என தெரிவித்துள்ளார்.






உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:


முன்னதாக நேற்று வெளியான வானிலை மையத்தின் அறிக்கையில், ”தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தொடர்ந்து வலுபெற்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலைகொள்ளக் கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


9 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை:


அதன்படி, இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும்,  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.