தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் தொடங்கியது முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக 20 செ.மீட்டர் அளவுக்கு மழை பதிவாகும் என ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் ஓரளவு வெயில் அடித்தாலும் இரவு நேரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது.



22 மாவட்டங்களில் மழை:


சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்றும் மழை இரவு நேரத்தில் வெளுத்து வாங்கியது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணி வரை பல மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்க்கப்போகிறது.






குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடி. மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூரில் காலை 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் அதற்கேற்றவாறு தயார் ஆகுமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியிருப்பதால் காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.