தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் மழை கொடடித் தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. தற்போதும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோல, வேலூர் மாவட்டத்திலும் மழை நீடித்து வருவதால் அந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை பெய்ததால் சென்னை மாநகரம் முழுவதும் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் இதுவரை வடியாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதன் காரணமாக, சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது