TN Rain Alert: தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.


வானிலை மையம் எச்சரிக்கை:


வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:


தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


19.10.24: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை வேலூர். திருப்பத்தூர் கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம்,  திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


20.10.24: தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர்,  பெரம்பலூர் மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையில் மழை:


சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என கூறப்பட்டது. லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. இந்நிலையில், காலை முதல் நகரின் பல்வேறு பகுகிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. ஆயிரம்விளக்கு, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் மட்டுமின்றி, நகரின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் அதிகாலையில் நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் அவதியுற்றனர்.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


இன்று கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று மீனவர்களை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.