தென்மாவட்டங்கள் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்துள்ளது. 


மேலும் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய அணைகளில் முன்னெச்சரிக்கையாக நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோரம் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் வழிந்தோடும் நீரோடு மழையும் நிற்காமல் பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்துள்ளதால் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களிலும் இருந்து பேரிடர் மீட்பு படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். 


திருநெல்வேலி. தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள் பாதிவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 


நிறுத்தப்பட்ட ரயில்கள் 


அதன்படி நிஜாமுதீன் - கன்னியாகுமரி விரைவு ரயில் விருதுநகரில் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை - தூத்துக்குடி செல்லும் முத்துநகர் ரயில் கோவில்பட்டியிலும், சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் இரு மார்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் விரைவு ரயில் நெல்லையுடன் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - நாகர்கோவில் இடையே செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கொடை ரோடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு -நாகர்கோவில் ரயில் மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. சென்னை - கொல்லம் இடையேயான விரைவு ரயில் விருதுநகரிலும், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி வரை இயக்கப்படுகிறது. 


இன்று ரயில் சேவை ரத்து 


இதனிடையே தென்மாவட்டங்களில் கனமழை பெய்வதால் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்சி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் -செங்கோட்டை விரைவு ரயில் விருதுநகர், ராஜபாளையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நெல்லை, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூர்- பாலக்காடு எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி - ஜம்முநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.