TN Rain Alert:  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல்  வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேபோல், தமிழகத்தின் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் அடுத்த ஒரு மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதிலும் பரவலான மழையும், 33 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய்யத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்மழை காராணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


மாண்டஸ் புயல் கரையைக் கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், இன்று ஒருநாள் மட்டும், காஞ்சிபுரம் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளம்

 

அதேபோல், காஞ்சிபுரத்தில் பல முக்கிய நீர் பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், காஞ்சிபுரம் மாநகரத்தின் மையப் பகுதியில் செல்லக்கூடிய முக்கிய நதியாக வேகவதி ஆறு விளங்கி வருகிறது.  வேகவதி ஆற்றில் முக்கிய, நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வழிவதால்,  வேகவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோரம் வசித்த மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதால், நகரில் இருக்கும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 

 

 ஏற்பட்ட பாதிப்புகள்

 

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 21 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 2668 கோழிகள் உயிரிழந்துள்ளன.123 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. 200 க்கும் மேற்பட்ட மரங்கள் புயலால் சாய்ந்தது. 117 கம்பங்கள் பாதிப்பு  அடைந்து உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.