TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு  மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


அரபிக் கடலில் புயல்?


நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி,  நேற்று நள்ளிரவு வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை (20-10-2023)  08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு  அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும்  வலுவடைந்து  22-10-2023 மாலை தீவிர புயலாக  நிலவக்கூடும். இது மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-2023  வாக்கில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும்.


நேற்று காலை (19-10-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை (20-10-2023)  05.30 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது 23-10-2023  வாக்கில் மத்தியமேற்கு  வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.  குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 


வானிலை நிலவரம்:


கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த  இரண்டு தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.


20.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


21.10.2023: தமிழக கடலோர மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும்,  தமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


22.10.2023 முதல்  24.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


25.10.2023 மற்றும் 26.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


21.10.2023: மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
22.10.2023: மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.