இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதியில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


நாளை தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


நாளை முதல் எங்கெல்லாம் மழை...? 


நாளை (04.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். அதேபோல், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை,  தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31- 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நவம்பர் மாதம் தொடங்கியது முதல் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பதிவாகி வருகிறது. தொடர்ந்து இதன் காரணமாக நகரின் அனேக இடங்களில் மழை பெய்து வருவதால் பூமியின் உஷ்ணம் தணிந்து காணப்படுகிறது. இந்த மழையானது அடுத்த சில தினங்களுக்கு தொடரும் எனவும், வெளியே செல்பவர்கள் குடையுடம், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ரெயின் கோர்ட்டுடனும் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.