தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையில் விடிய விடிய மழை
பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே இலேசானது முதல் கன மழை வரை பெய்து வருகிறது. காலையில் அதிக அளவு வெப்பம் நிலவும் நிலையில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்வதால் பொதுமக்களே குழம்பி தவிக்கின்றனர். இப்படியான நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் நேற்று மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை சென்னையில் கனமழை பெய்தது. இதனால் ரோடுகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதோடு பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரம் இடைவெளிக்குப் பின் மீண்டும் இரவு 9 மணியளவில் சென்னை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய, விடிய பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாட்டின் பிறமாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்தது.
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்றைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விடுமுறை தினமான இன்று வெளியே செல்ல நினைப்பவர்கள் உரிய திட்டமிடலோடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (செப்டம்பர் 17) இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.