TN Rain Alert: அக்டோபர் 1 முதல் தற்போது வரை 23 செ.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த காலத்தை காட்டிலும் நான்கு சதவீதம் குறைவு என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
"காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்”
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, ”தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவுக் கூடும். இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 16ஆம் தேதி வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு பந்தக்கடல் பகுதியில் ஒடிசா கடற்கரை பகுதியில் நிலவக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கனமழை தொடரும்”
மேலும், ”தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் பரவலாக மழை பெய்யும். அடுத்து வரும் இரண்டு தினங்களில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை நிலவரம் என்ன?
"தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மிதமான மழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்ததுள்ளது. அதிகபட்சமாக நாகை வேதாரண்யத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரை 23 செ.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த காலத்தை காட்டிலும் நான்கு சதவீதம் குறைவு. மன்னார் வளைகுடா, குமரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மீனவர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.