தமிழ்நாட்டில் கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்றைய வானிலை நிலவரம் என்ன என்பதை காணலாம். 


தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல்- மே மாதம் வந்து விட்டாலே வெயில் மண்டையை பிளக்கும் அளவுக்கு அடிக்கும். குறிப்பாக கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வெயில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் வெயில் அதன் உக்கிரத்தை காட்ட தொடங்கியது. இதனால் மே மாதம் தாக்குப்பிடிப்போமா என்ற எண்ணம் மக்களிடத்தில் இருந்தது. 


ஆனால் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக உள்மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு மழை பெய்துள்ளது. குற்றாலம் தொடங்கி பல நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 


வெள்ளக்காடான திருச்சி


இதனிடையே நேற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகப்பட்சமாக திருச்சியில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 10 செ.மீ., மழையும் பெய்துள்ளது. அதேபோல் சேலத்தில் 8 செ.மீ., ஏற்காட்டில் 7 செ.மீ., நாமக்கல் 6.4 செ.மீ., கடவூரில் 5.7 செ.மீ., ஆவடியில் 2 செ.மீ., பூண்டியில் 1 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலி மலையில் 10 செ.மீ., அன்னவாசலில் 6 செ.மீ., குடுமியான்மலை 5.5 செ.மீ., இலுப்பூரில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழந்ததால் மக்கள் சற்று அவதியடைந்தனர். 


இன்றைய நிலவரம் என்ன? 


இதனிடையே இன்றைய தினம் தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேசமயம் குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் இன்று நடக்கவிருந்த படகு போட்டி ரத்து செய்யப்பட்டு மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆழ்க்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் மே 23 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.