TN weatherman Cyclone Update: (03-12-2025): தென்சென்னை மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்று நல்ல மழை பதிவாகும் என, தனியளர் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கரையேறிய டிட்வா
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒருவழியாக் டிட்வா புயலின் மிச்சமான காற்ரழுத்தத் தாழ்வு மண்டலம் பகுதியளவு கரையேறி நிலப்பகுதிக்குள் புகுந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கரையேற மேலும் சில மணி நேரங்கள் ஆகலாம். இதன் காரணமாக சென்னையின் மீது மிகவும் தீவிரமான மேகக் கூட்டம் நிலவுகிறது. இதனால் ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த பகுதிகளில் காலை 2.30 மணி வரை வலுவான மழை பதிவாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் பரவலாக மழை
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலப்பகுதிக்குள் புகுந்ததன் விளைவாக திருவண்ணாமலை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை பொழியக்கூடும். மேகக் கூட்டங்கள் கோவை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்கள் மீதும் பரவியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்குள் டிட்வாவின் மிச்சம் நுழைந்துள்ளதால், இன்று மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழியக்கூடும்.
தென்சென்னை, செங்கல்பட்டில் மழை:
தொடர்ந்து வெளியிட்ட மற்றொரு பதிவில், “செங்கல்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, தாம்பரம், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் தென்சென்னை பகுதிகளுக்கான நேரம் இது. கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் பெய்யத் தவறிய மழையானது, டிட்வாவின் மிச்சம் கரையை கடக்கும் சூழலில் கொட்டி வருகிறது” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மற்றும் மின்னலுடன் விடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஹேமச்சந்தர் எச்சரிக்கை:
மற்றொரு தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாபலிபுரத்திற்கு தெற்கே கரையைக் கடந்துள்ளது, தற்போது விழுப்புரம் பகுதியில் நீடிக்கிறது. இது வடக்கு தமிழ்நாட்டின் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் தீவிரமான பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும், சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழ்நாடு, காவிரி டெல்டா பகுதி மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அரபிக் கடலை அடைவதற்கு முன்பு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கடந்து செல்லும் டிட்வா புயலின் எச்சங்களால், இன்று மற்றும் நாளை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று எச்சரித்துள்ளார்.