வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து பலத்த கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வடிய வழியின்றி தேங்கியது. மேலும் டிட்வா புயலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு, மழைநீரை உடனடியாக வடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிட்டார்.

Continues below advertisement

நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர் 

கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். முதலில், ஆறுபாதி கிராமத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள சம்பா சாகுபடி பயிர்களைப் பார்வையிட்டார். அங்குள்ள விவசாயிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, பயிர் பாதிப்பின் விவரங்களையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து. மழைநீரை விரைவாக வடிய வைப்பதற்கான விரிவான ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, காலகஸ்தீனாதபுரம் கிராமத்தில் உள்ள சம்பா பயிர்களையும் பார்வையிட்ட ஆட்சியர், கிளை வாய்க்கால்களில் மழைநீர் எவ்விதத் தடையுமின்றி வடிந்து செல்கிறதா? என்பதையும் தீவிரமாக ஆய்வு செய்தார். பின்னர், காளியப்பநல்லூர் கிராமத்திலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.

Continues below advertisement

மழைநீர் வடிக்கும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் புயலையொட்டி பெய்த பெருமழையால் சம்பா சாகுபடி பயிர்களைச் சுற்றி மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனை வடிய வைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வேளாண்மைத்துறை அலுவலர்கள் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து இப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் தீவிரம் 

குடியிருப்புப் பகுதிகளை சுற்றியுள்ள மழைநீரை வடியவைக்கும் பணிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோரும் ஈடுபட்டுள்ளனர்.

புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு (Control Room) வரும் புகார்கள் மீது, துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் மற்றும் செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, சுமதி ஆகியோர் உடனிருந்தனர்.

விவசாயிகளின் குற்றச்சாட்டு

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இதுவரை அதிகாரிகள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் என யாரும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்று விவசாயிகளும், மாவட்ட மக்களும் வேதனை தெரிவித்து வந்தனர். இந்த குற்றச்சாட்டை போக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள இந்தத் துரித நடவடிக்கை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.