Tamilnadu School Leave Today (04-12-2025): மூன்று நாட்களுக்குப் பிறகு மழையின்றி சென்னையில் இன்றைய விடியல் தொடங்கியுள்ளது.
டிட்வா கதை ஓவர்?
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை சூறையாடி நிலையில், தமிழகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடலுக்குள்ளேயே அது வலுவிழந்தது. அதேநேரம், உடனடியாக கரையேறாமல் சென்னை அருகிலேயே நிலைகொண்டிருக்க, கடந்த திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான், நேற்று காலை தொடங்கி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது படிப்படியாக கரையேற தொடங்கியது.
வானிலை மையம் எச்சரிக்கை:
இதையொட்டி நேற்றி வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம். தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன் தெற்கு ஆந்திர மெதுவாக வடதமிழக- புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்துஅதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கான வானிலை:
05-12-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06-12-2025 முதல் 09-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை
திங்கட்கிழழை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, பல இடங்களில் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அரசு முன்னெடுத்த மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பல இடங்களில் தண்ணீர் உடனடியாக வடிந்தாலும், தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியபடியே உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்யாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரையும் வெளியேற்ற அரசு அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.