செங்கல்பட்டு : நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ள, கேளம்பாக்கம் அருகே பொன்மார் பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடத்தில், கை, கால்களை சங்கிலியால், கட்டி ஒரு பெண் எரிந்த நிலையில் உயிருக்கு போராடி வந்துள்ளார். இளம் பெண் தீயில் கருகிய நிலையில் அலறி கத்தி கூச்சலிட்டு உள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த, இளம் பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணிடம், பெண் குறித்து விவரம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு தெரிந்த வெற்றிமாறன் என்பவரின் தொலைபேசி எண்ணை மட்டும் கொடுத்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:


இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோன்று பெண் கொடுத்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெண் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனில்லாமல், அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து பெண்ணின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு அறையில், உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

முதற்கட்ட தகவல்


 

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த பெண், பெருங்குடியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும்  நந்தினி (வயது25) என தெரிய வந்துள்ளது. இந்தநிலையில் உயிரிழந்த நந்தினி கொடுத்த தகவலின் அடிப்படையில்,  வெற்றிமாறன் என்பவரை போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். வெற்றிமாறன் கொடுத்த தகவலின் அடிப்படையில் நந்தினி கண்ணகி நகரில் வசித்து வரும் தனது, சித்தப்பா ராஜரத்தினம் என்பவர் வீட்டில் தங்கி பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் நந்தினி உயிரிழந்த தகவலை கேட்டு வெற்றிமாறன் கதறி அழுதுள்ளார்.

தனிப்படை அமைத்து விசாரணை


 

ஐடி பெண் ஊழியர் கை கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தி கொலை செய்த பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது கொலையாளி யார்? என்ன காரணத்திற்கு கொலை செய்தனர்? கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன என பல்வேறு கோணங்களில் தாழம்பூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரனையை துவங்கினர். மேலும் கொலை நடந்த சுற்றுவட்டார இடங்களில் உள்ள  பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் சோதனையிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

 

நந்தினியின் முன்னாள் காதலன்:


 

வெற்றிமாறனிடம் போலீசார் விசாரணை துவங்கியபோது முன்னுக்குப் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினரின் சந்தேகம் வெற்றிமாறன் மீது திரும்பி உள்ளது. காவல்துறை  விசாரணையில் நந்தினி மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் அதே, பகுதியை சேர்ந்த வெற்றிமாறன்  என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வெற்றி பெண்ணாக இருந்து ஆணாக மாறிய, திருநம்பி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், வெற்றி திருநம்பி என்பதை மறைத்து நந்தினியை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. வெற்றி திருநம்பி என்பது தெரிய வந்தவுடன், நந்தினி  விலகி உள்ளார். இந்த நிலையில் தான் நந்தினி ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

 

பிறந்தநாள் சர்ப்ரைஸ்:


 

நேற்று நந்தினிக்கு பிறந்தநாள் என்பதால் முன்னாள் காதலன்  வெற்றிமாறன்  நந்தினியை அழைத்துக்கொண்டு கோவில், முதியோர் இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.  இரவு நேரத்தில் மாம்பாக்கம் அடுத்த பொன்மார் பகுதி மாம்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலை பகுதியில் அழைத்து சென்று, உனக்கு நான் சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் என்று நந்தினியிடம் நைசாக கூறி  கை, கால்களை சங்கிலியால் கட்டியுள்ளார். மேலும் கருப்பு துணியால் கண்ணையும் கட்டி உள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து கை ,கால் ,கழுத்து முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்   துடிக்கதுடிக்க வெட்டியுள்ளார். பின்னர் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பியுள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் எரிந்து கொண்டிருந்ததை நந்தினி  பார்த்து ஓடிச் சென்று அணைத்தனர். பின்னர் உயிருக்கு போராடி போராடிய நந்தினி ஆம்புலன்ஸ் வரவைத்து அனுப்பி வைத்தனர்.

 

திட்டமிட்டு அரங்கேறிய கொலை

 

தன்னை காதலித்து ஏமாற்றியதால் வெற்றி,  நந்தினியை கொலை செய்ய திட்டம் போட்டு உள்ளார். பின்னர் நந்தினி பிறந்தநாள் அன்று நைசாக பேசி வரவைத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். பிறந்தநாள் அன்று திருநம்பியால் முன்னாள் காதலி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தாழம்பூர் போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிமாறன் நந்தினி கொலை செய்தது மட்டுமில்லாமல் காவல்துறை விசாரித்த பொழுது கதறி அழுவது நாடகமாடி இதிலிருந்து தப்ப முயன்றது குறிப்பிடத்தக்கது.