தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. அதன்படி, அடுத்த ஒரு 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை,சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல் அடுத்த 3 மணி நேரத்தில்  திருத்தணி ,பள்ளிப்பட்டு , கும்மிடிப்பூண்டி,ஊத்துக்கோட்டை,மதுராந்தகம்,செய்யூர் , ஆற்காடு,வாலாஜாபேட்டை,  திருப்போரூர், திருக்கழுகுன்றம்  ஆகிய இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் சென்னையை பொறுத்தவரை காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


இன்று (ஜூலை 26) தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.