சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று முன்தினம் முதல் வானம் மேகமூட்டமாக காணப்படும் நிலையில் அவ்வப்போது இலேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இல்லாத நிலையில் மக்கள் இந்த இதமான சூழலை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மாலை 6.30 மணியளவில் இருந்து மழை பெய்தது. தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், பூவிருந்தவல்லி, போரூர், குமணன் சாவடி, சைதாப்பேட்டை, கோயம்பேடு , வானகரம், பெருங்களத்தூர், ராமாவரம் என அனைத்து இடங்களிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னையில் பல்லாவரம்,தாம்பரம்,வண்டலூர்,குன்றத்தூர், பூவிருந்தவல்லி,ஆலந்தூர்,மதுரவாயல்,மாம்பலம்,ஊத்துக்கோட்டை,அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,