தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மணி நேரத்தில் மழை
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிசம்பர் 27) வலுவிழந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக டிசம்பர் 28 (இன்று) மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. தென் தமிழக மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
டிசம்பர் 27: கேரள கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
டிசம்பர் 28: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.