கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, ”தொடர்ந்து மழை பெய்தாலும், தொண்டர்கள் இருக்கையில் இருந்து நகராமல் இருப்பது இரண்டு வெற்றி வேட்பாளரை கோவை, நீலகிரி தரும் என்பதற்கு அச்சாரமாக உள்ளது. நீலகிரி, கோவையில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வது புதிது அல்ல. உலகில் உள்ள எல்லா நாடுகளும் தேங்கியுள்ள நிலையில், இந்தியா வளர்ந்து கொண்டுள்ளது. கோவை, திருப்பூர் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை இல்லை. நீலகிரிக்கு பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரி கொடுத்துள்ளார். எம்.பி.க்கள் இல்லையென்றாலும் மோடி வாரி கொடுக்கிறார். மோடி வாரி கொடுத்தாலும், இங்கு சேவை செய்ய சேவகன் தேவை. 2 ஜி வழக்கில் சிறைக்கு சென்ற நீலகிரி எம்.பி.யான ஆ.ராசாவின், பினாமி சொத்து முடக்கப்பட்டுள்ளது. ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என ஆ.ராசா எட்டிப்பார்த்து கொண்டுள்ளார். ஆ.ராசா மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி கொங்கு பகுதி. கொரோனா தடுப்பூசி வழங்கியதில் கூட அரசியல் செய்தனர். இது பட்டத்து இளவரசருக்கான ஆட்சி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உதயநிதி வருகைக்காக மூன்றரை மணி நேரம் குழந்தைகள் நேரு ஸ்டேடியத்தில் காக்க வைக்கப்பட்டனர். யாரும் சாலையில் நடந்து கூட செல்ல முடியவில்லை. அமைச்சர்கள் ஒரு குடும்பத்திற்கு சேவகம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.
யாரையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என நினைக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் கரும்பு கூட தரக் கூட திமுக அரசு தயாராக இல்லை. எதிர்கட்சியாக இருந்தபோது 5 ஆயிரம் தரவேண்டும் என திமுகவினர் சொன்னார்கள். கடந்தாண்டு கொடுத்த பொருட்களையும், இந்தாண்டு திமுக தரவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன பனைவெல்லம் தரப்படவில்லை.
பொய், ஊழல், குடும்ப ஆட்சி, மக்களை ஏமாற்றுவதில்தான் முதலமைச்சர் நம்பர் 1. நாற்பதும் நமதே என்ற கனவு கோட்டையில் முதலமைச்சர் இருக்கிறார். 2024 தேர்தலில் 400 எம்.பி.க்களுக்கு மேல் பெற்று, மோடி மீண்டும் ஆட்சியில் அமர்வார். 2014, 2019-இல் தவறு செய்துவிட்டோம். 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்.பிக்கள் பாராளுமன்றத்திற்கு செல்லவேண்டும். தமிழக எம்.பிக்களை மோடி அமைச்சராக்குவார். கோவை, நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்