செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை என தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணைய குற்றங்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இணைய குற்றங்கள் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் பேசினார். பொதுமக்கள் இணைய வழியில் நடைபெறும் மோசடிகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் இணைய வழி மோசடி மூலம் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணில் காவல்துறையில் புகார் தெரிவிக்கலாம் என கூறினார். இந்நிகழ்வில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி ஜி பி சைலேந்திரபாபு..,


தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குளறுபடியும் இல்லை. தமிழக காவல்துறையினர் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீன கருவிகள் என்றும் ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது, உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. பல ஆண்டு காலமாக இதே நடைமுறைதான் காவல்துறையில் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறையிடம் அதிக எண்ணிக்கையில் தரமான உபகரணங்கள் உள்ளது. 


தமிழ்நாடு காவல்துறை தரமான பாதுகாப்பு உபகரணங்களை கையாளுகிறது. அந்தமான், கேரளா போன்ற  பிற மாநிலங்களிலும் தமிழ்நாடு காவல்துறை உபகரணங்கள் பாதுகாப்புக்கு செல்கிறது. 


மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவிற்கு தரமான உபகரணங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார்.


என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் நேற்று சந்திப்பு நடைபெற்றதாகவும், அப்போது கோவை குண்டுவெடிப்பு தவிர தமிழகத்தில் உள்ள 15 என்.ஐ.ஏ வழக்குகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார்.  மேலும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாக அவர் கூறினார். 


முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டி ராஜ் பவனில் நேற்று (நவம்பர் 29) நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது கோரிக்கை மனுக்களையும் அளித்தார். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர்  


''பிரதமர் மோடி பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் விழாவின்போது சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வேலை செய்யவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்? இதுகுறித்து ஆளுநரிடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் உள்துறை தூங்கிக் கொண்டிருப்பதாக ஆளுநரிடம் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.


தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் அதிக அளவு கூடக்கூடிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் வேலை செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.  


இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காவல்த்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தார்.