திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா போலீஸாரால் கைது செய்யப்பட்டு, (Detained) பின்னர் விடுவிக்கப்பட்டார்.


பழனி இடும்பன் கோயில் குளக்கரையில் இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில்  மகா சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குச் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவும், மன்னார்குடி செண்டலங்கர ஜீயர் ஆகியோர்  அழைக்கப்பட்டனர்.  அழைப்பின்பேரில் ஹெச்.ராஜா அந்த நிகழ்ச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை வழிமறித்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் படை ராஜாவை கைது செய்தனர். கைது செய்ய வந்தவர்களிடம் காரில் அமந்தபடியே ஹெச்.ராஜா மரியாதைக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஹெச்.ராஜா தனியார் மணடபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.


ஏன் கைது? 


ஹெச்.ராஜா கலந்துகொள்ளவிருந்த இடும்பன் கோயில் குளக்கரையில் மகா சங்கமம் நிகழ்ச்சி நடத்த உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பழனி காவல் கோட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு (30)2 அமலில் உள்ளதால் மகா சங்கமம் நிகழ்ச்சியால் சட்டம் ஒழுங்கு பிரச்னையோ அல்லது  பொது அமைதிக்குக் குந்தகமோ ஏற்படும் சூழல் உள்ளது எனக் கூறியே போலீசார் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக தெரிகிறது. 


அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும், இரவு நிகழ்ச்சிக்கான மின்சார தேவை குறித்து, நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கான இடவசதி குறித்தும் உரிய அனுமதி ஏதும் பெறவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டியே அந்நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு சென்ற ஹெச்.ராஜாவை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே கைது செய்யப்பட்டவுடன் ட்விட்டரில் பதிவிட்ட ஹெச். ராஜா, தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்  பி அவர்களால் எவ்வித காரணமும்  கூறாமல்  கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். கைது செய்ததும் வழக்கறிஞரை தேடாமல் கூட்டத்தைச் சேர்க்க நினைப்பது ஏன் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.