முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி காந்தி கொலை வழக்கில் கடந்த 1991ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுதாக்கல் செய்தார். தொடர்ந்து 9 மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து, பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?
- அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-ன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை ஆளுநர் நிச்சயம் ஏற்க வேண்டும்.
- மேலும் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161-ன் கீழ் முடிவு எடுக்க நீண்ட காலம் எடுத்தால் அதை நிச்சயம் நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும். அதிலும் குறிப்பாக அதற்கு மாநில அமைச்சரவை பரிந்துரை அளித்தும் முடிவு எடுக்காமல் இருந்தால் ஆய்வு செய்யலாம்.
- தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. ஆகவே இந்த பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை அளித்தது ஏற்புடையதல்ல.
- அதேபோல் ஐபிசி 302 பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கிற்கு மாநில அரசு பரிந்துரை செய்யலாம். அதாவது அந்த வழக்கிற்கு அரசியலமைப்பு சட்டமோ அல்லது நாடாளுமன்ற சட்டமோ எந்த அரசு பரிந்துரை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கவில்லை என்றால் மாநில அரசு அதற்கு பரிந்துரை செய்யலாம்.
இவ்வாறு இந்த வழக்கின் தீர்ப்பில் சில முக்கியமான அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தன்னுடைய 142 பிரிவின் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்