தமிழ்நாட்டில் அடுத்தடுத்த முக்கிய பதவி வகிக்கும் இரண்டு அதிகாரிகளில் பணி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால் தமிழ்நாடு அரசில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது.


தற்போது பதவியில் இருக்கும் தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி இருந்து வந்தது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது ஒரு புறம் இருக்க தற்போது தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி தற்போது புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கடந்த சில தினங்களுக்கு முன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இந்த பதவிக்கு தகுதியான நபர் யார் என்பது குறித்த ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டது. சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஆபாஷ் குமார், சீமா அகர்வால், பி.கே.ரவி, ஏ.கே.விஸ்வநாதன், அம்ரேஷ் பூஜாரி உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்றது. இந்த பெயர்கள் உள்ள பட்டியலை மத்திய குடிமைப்பணிகள் ஆணியத்திடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் அடுத்த டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


யார் இந்த சங்கர் ஜிவால்?


சென்னை மாநகராட்சி  காவல் துரை ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பொறியியல் படிப்பை முடித்த இவர் சில காலம் நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். அதனை தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு ஐ.பி,எஸ் தேர்வில்  தேர்ச்சி பெற்று காவல் துறையில் இணைந்தார். சேலம், மதுரை மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அவர், மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மண்டல இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 8 ஆண்டுகள் மத்திய அரசு பணி, ஏடிஜிபி, ஐஜி, உளவுத் துறை டி.ஐ.ஜி, சிறப்பு அதிரடிப்படை ஆகிய முக்கிய பதவிகள் வகித்தவர். மேலும் தமிழ்நாட்டில் அதிரடிப்படை ஐ.ஜியாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.  


அதுமட்டுமின்றி நாட்டில் அதிகப்படியான போதைப்பொருளை கைப்பற்றிய பெருமை இவருக்கே பொருந்தும். சென்னை மாநகராட்சியின் காவல் துறை ஆணையராக 2021 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆணையராக பொறுப்பேற்ற பின் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தனது கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறுகின்றனர். இவர் இரண்டு முறை குடியரசு தலைவர் பதக்கம் பெற்றவர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்த டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.