எந்த நாட்டில் சுகாதாரமும், கல்வியும் மக்களுக்கு இலவசமாக தரமாகக் கிடைக்கிறதோ அந்த நாடு வளர்ந்த நாடு என்று அறியப்படுகிறது.


அந்தவகையில் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். உலகமே கொரோனா பெருந்தொற்றால் சிக்கித் தவிக்கிறது. இந்தியா இரண்டாம் அலையில் சிக்கி தற்போதுதான் மீண்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் இந்த முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக மக்களவைக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். சுகாதார உரிமைச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனிநபருக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவைகள் கிட்ட வேண்டும். சட்டப்பிரிவு ஒன்று  அளிக்கும் குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவையை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இதில் சட்டப்பிரிவு 21 பியை உட்புகுத்தி அவசர மருத்துவ சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.


இதற்கு முன்னரும் கூட சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்துள்ளன. 2017ல் ராஜ்யசபா எம்.பி விஜயசாய் ரெட்டி இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். அப்போது மக்களவையில் அந்த மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசிய விஜயசாய், சுகாதாரத்துக்கு அரசு செலவினம் 1.4% என்றளவிலேயே உள்ளது. பொது சுகாதாரத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வாதிகள் போதுமானதாக இல்லை என்றும் சரிசமமாக இல்லை என்றும் தெரிவித்தார்.


2018ல் ராஜ்யசபா எம்.பி. ரூபின் போராவும் சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக்கக் கூறி கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் இந்திய அரசியலமைப்பு சுகாதார உரிமையை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 10% ஆவது பொது சுகாதாரத்தைப் பேண ஒதுக்க வேண்டும் என்று அவர் கூறினார். 2019-ஆம் ஆண்டில், நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக மனு சிங்வி ராஜ்யசபாவில் இலவச மருத்துவ சேவை மசோதாவை Right to Universal and Free Health Care Bill அறிமுகப்படுத்தினார். அவரும், அனைவருக்கும் இலவச சிகிச்சை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.


20 ஆண்டுகளுக்கு முன்னால் 2002ஆம் ஆண்டு ஏ.பி. வாஜ்பாய் தலைமையில்தான் கல்வி அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்கப்பட்டது. அதுபோல அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஆக்குவதற்கு இதுவே தகுந்த தருணம் ஆகும். எனவே, எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 21-ல் திருத்தம் செய்து சுகாதாரத்துக்கான உரிமையை அடிப்படை உரிமையாக ஆக்குவதற்கு மசோதா ஒன்றை தாங்கள் கொண்டு வரவேண்டும் என்று எம்.பி. ரவிக்குமார் ஏற்கெனவே கடிதம் மூலம் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.