கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள உள்ளது சீக்கம்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் தமிழகத்தில்  முன்மாதிரியாக திகழ்கின்றனர். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசி போட வந்த மருத்துவ குழுவினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து வழியனுப்பி வைத்துள்ளனர்.


இது குறித்து தடுப்பூசி போடச் சென்ற கிளியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கதிரவனிடம் பேசினோம், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள் என்றால் அது சீக்கம்பட்டு கிராம மக்கள் மட்டுமே. கொரோனா வைரசின் தீவிரத்தை எடுத்து சொன்னதும் அந்த ஊர் இளைஞர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்கள் மூலம் மற்ற பெரியவர்களுக்கு புரியவைத்து தடுப்பூசி செலுத்தினோம். இது எங்களுடைய டீமிற்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி.  


முதலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களை எளிதாகக் கண்டறிவதற்காக வாக்காளர்கள் பட்டியலைக் கொண்டு செயல்பட தொடங்கினோம். வேலைக்காக வெளியூர் சென்றவர்கள், உடல்நிலை சரியில்லாத முதியவர்கள், கொரோனா தொற்றிலிருந்து சமீபத்தில் மீண்டவர்கள் போன்ற சிலரை தவிர்த்து, தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியான அனைவரையும் கண்டு அவகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என முடிவு செய்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினோம். 



அவர்கள் முதலில் பயந்தாலும், இளைஞர்கள் ஆர்வமாக போடுவதை பார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக்கொள்ள முன்வந்தார்கள் அப்போது 20% மக்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மீதம் உள்ள 80% உள்ள மக்களுக்கு  ஏரி வேலை செய்யும் இடத்தில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திட முயன்றோம். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் காய்ச்சல் இருந்தால் ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்கும் அனுமதிக்கிறோம் என்றும் எடுத்துக்கூறி 70% தடுப்பூசி அங்கேயே செலுத்தினோம்.


 சில வீடுகளில் பெண்கள், "தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி சமைப்பது, அவர்களை பார்த்துக்கொள்வது என்று பயந்தனர். அப்போது, அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாக இருந்து, அப்படியெல்லாம் ஏதும் ஆகாது. அப்படி மீறி தங்களுக்கு உடல் நிலை சரியில்லை எனில் நாங்கள் சமைத்து தருகிறோம் என்றும் அவர்கள் கூறினோம். அதன்பின் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் செலுத்திக்கொண்டனர்.



கடந்த ஜூன் 3-ம் தேதி அன்று  வெளியூர் சென்றிருந்த 10 பேர் ஊருக்கு வந்தனர். அவர்களுக்கும் தடுப்பூசி போட்டு விட்டோம்.  அதேபோன்று கடந்த சனிக்கிழமை அன்று தான், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என்ற அறிவிப்பு வந்தது. அடுத்த அரை மணி நேரத்திலேயே 2 கர்ப்பிணி பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்திவிட்டோம் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்த  கிராமச் செயலாளர், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் போன்றோர் உதவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது" என்றார். மேலும் அவர், "அடுத்த கட்டமாக அருகில் உள்ள தாமல், பூவனூர் கிராமத்தில் இதேபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளோம்" என்றார்.


இதுகுறித்து கிராம ஊராட்சி செயலாளரிடம் பேசுகையில், "எங்கள் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வந்தோம். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுடைய உறவினர்களை சுமார் 15 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். அதன் தொடர்சியாக ஒவ்வொருவராக போடத் தொடங்கினர். கொஞ்ச நாள்களுக்கு முன் எங்களுடைய கிராமத்தில் ஒருவர், கொரோனா சிகிச்சையிலிருந்து வீடு திரும்பி, பின் ஒரு சில வாரங்களில் இறந்தார். அதன் பின் மக்கள் அனைவரும் அக்கறையோடு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.



அவர்களுக்கு  தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாங்கள் மேற்கொண்ட முறையில்  கிராமத்தில் உள்ள வாக்காளர் பட்டியலைக் கொண்டு  மொத்தம் 1026 வாக்காளர்கள் அதில் வேலைக்காக வெளியூர் சென்றிருப்பவர்கள் 234, வெளிநாடு சென்றிருப்பவர்கள் 2, சமீபத்தில் இறப்பு நேர்ந்து பெயர் நீக்கம் செய்யப்படாமல் இருப்பவர்கள் 33, கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 15 நபர்கள் உடல்நலம் முடியாத மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்கள் 7, கர்ப்பிணி பெண்கள் 15 பேர்கள் என இவர்களைத் தவிர்த்து, மீதமுள்ள 715 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. அதேபோன்று பட்டியலில் இல்லாமல் தற்சமயம் 18 வயது நிரம்பிய சுமார் 30 இளம் வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தற்போது எங்கள் கிராமத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்கள்" என்றார் மகிழ்ச்சியாக. கிராமத்தின் சார்பாக மருத்துவ குழுவிற்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.