உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம்  வெளியிட்டுள்ளது. பெரும்பான்மையான இடங்களை ஆளும் கட்சியான திமுக கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 


தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது.  அதன்படி, 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் கடந்த ஜூலை 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 


இதில், 292 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், நகர்புற உள்ளாட்சி அமைப்பில் ஒரு நகராட்சி வார்டு பதவியும், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களில், தேனி பெரியகுளம் நகராட்சி வார்டு எண் 26க்கான தேர்தல் மட்டும் வழக்கு காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 


அதேபோல், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், மூன்று கிராம உள்ளாட்சித் தலைவர்கள், 22 உள்ளாட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனுக்கள் பெறப்படாததால் தேர்தல் நடத்தப்படவில்லை. எஞ்சிய இரண்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 16 ஒன்றிய வார்டு உறுப்பினர், 21 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 122 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 171 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒரு நகராட்சி வார்டு உறுப்பினர், ஏழு பேரூராட்சி வார்டு உறுப்பினர் என, ஒன்பது நகர்புற உள்ளாட்சி இடங்கள் என மொத்தம் 180 இடங்களுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான முடிவுகளைமாநில தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 14ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆளும் கட்சியான திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது. பிராதான எதிர்கட்சியான அதிமுக கட்சிகளுக்கான நேரடித் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் முடிவுகள்; 




முடிவுகளின் அடிப்படையில், ஆளும் கட்சியான திமுக இரண்டு மாவட்ட வார்டு உறுப்பினர், 14 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், இரண்டு மாரகராட்சி வார்டு உறுப்பினர், ஆறு பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.