நீட் மசோதா சிறப்பு கூட்டத்தில் பாமக சார்பில் எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பேசியதாவது: 


‛‛எனக்கு தெரிந்தவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்தை, ஆளுநர் யாரும் திருப்பி அனுப்பிய வரலாறு இல்லை. தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமானது, 69 விழுக்காடு இடஒதுக்கீடு அங்கீகாரம் பெற்றது, இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றது. ஆனால் அதற்கு 1993 ஜனவரி 30 ல் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஜனவரி 31 ல் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த மருத்துவ, பொறியில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யும் சட்டம் 2006 டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. ஜல்லிக்கட்டு அனுமதி மசோதா 2017 ஜனவரி 21 ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்துமே பொது பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பானவை. எந்த ஆளுனரும் இவற்றை திருப்பிஅனுப்பவில்லை. மாறாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற்றப்பட்டன.இதில் 69 சதவீத விழுக்காடு விவகாரம் மட்டும், மத்திய அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது.




இதை ஏன் கூறுகிறேன் என்றால், ஆளுநரின் ஒத்துழைப்போடு தான் இவை அனைத்தும் நடந்தது. 2017 ல் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், தற்போது அனுப்பப்பட்ட மசோதாவை திருப்பி அனுப்ப காரணம் என்ன? அதில் இல்லாத குறை, இதில் என்ன உள்ளது? திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாது. நீட் தேர்வு சமூக நீதியை சூறையாடும். நீட் தேர்வு வந்தால் மருத்துவம் வணிகம் ஆகாது என்று மத்திய அரசு கூறுகிறது. பஞ்சாப்பில் ஒரு மாணவர் இயற்பியலில் 0 , வேதியியல் 15, உயிரியியலில் 85 மதிப்பெண்ணுடன் மருத்துவர் ஆகியுள்ளார். இதுவே நீட் வேண்டாம் என்பதற்கு சரியான உதாரணம். 


நீட் விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றுவது பொருத்தமானது, தேவையானது. இனியாவது மீண்டும் அனுப்பப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இன்று நிறைவேற்றப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தான் ஆக வேண்டும். அதன் பின் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆளுநர்  ஒப்புதல் கிடைத்ததும், முதல்வர் தலைமையிலான அனைத்து கட்சி குழு டெல்லி சென்று, மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும். அதன் பின் குடியரசு தலைவர் ஒப்புதல் பெற, உயர் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்த மசோதாவை பாமக முழுமையாக ஆதரிக்கிறது,’’ என்றார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண