சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் சிறப்பு கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “  நீட் தேர்வை தமிழக மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், மக்களின் உணர்வை மீறியும் 2017க்கு பின் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர், கடந்த 13.9.2021ம் நாளில் தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு நீட் விலக்கு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பின்னர், இருமுறை முதல்வர். ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.


ஆனால், 142 நாட்களுக்கு பின்னர் ஒரு கடிதத்தை ஆளுநர் அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவை ஆளுநர் தன்னிச்சையாக திருப்பியனுப்பியது சரியான முடிவல்ல. தமிழக அரசின் சட்டமசோதா, நீதிபதி ஏ.கே.ராஜன்  குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட மசோதா என்று ஆளுநர் கூறியுள்ளார். ஆனால், ஆளுநர் கூறுவது போல இது வெறும் அறிக்கயைில் அடிப்படையிலான அல்ல.




நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வு தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து விரிவாக ஆய்வு செய்து பொதுமக்கள் கருத்துக்களை கேட்டு 7 பரிந்துரைகளை அளித்தது. அதில் உள்ள மூன்றாவது பரிந்துரையை ஆராய்ந்து, அதில் சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை முறையாக கேட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம்.  மேலும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளதுபோல நீட் விலக்கு மசோதாவில் இடம்பெற்றுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு கருத்துக்கள் வெறும் யூகங்கள் அல்ல. மேம்போக்காக கூறப்பட்டுள்ள ஆளுநரின் கருத்து தமிழக அரசு அமைத்த உயர்மட்டக்குழுவை அவமதிக்கிறது.


நீட் தேர்வு உண்மையில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே எளிதானதாக உள்ளது. மற்றபடி கிராமப்புற ஏழை, பட்டியலின மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாக உள்ளது. மேலும், புதியதாக 12வது வகுப்பு தேர்வை முடித்து நீட் தேர்வை எழுதுபவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று பன்முறை எழுத வசதியான மாணவர்களுக்கு சாதகமாக இந்த நீட் தேர்வு உள்ளது.




நீட் தேர்வால் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் 1 சதவீத்திற்கும் குறைவான மாணவர்களே மருத்துவக்கல்லூரிகளில் சேர முடிகிறது. இதனால்தான் நீட் தேர்வை எதிர்த்து அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. நீட் தேர்வு தனிப்பயிற்சியை ஊக்குவிக்கிறது. 2 முதல் 3 ஆண்டுகள் பயிற்சி தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் உயர்மட்டக்குழுவின் அம்சங்களை குறைகளாக சுட்டிக்காட்டுவது அரசியலமைப்பின்படி சரியானது அல்ல.


நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை ஒரு தலைபட்சமானது என்று ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில் அந்த குழு பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆளுநர் தனது கடிதத்தில் வேலூர் சி.எம்.சி. கல்லூரி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை பற்றி கூறியுள்ளார். அதனைச் சுட்டிக்காட்டி, நீட் தேர்வு சரியானது எனக்கூறுகிறார். தமிழக அரசால் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி திருப்பியனுப்பியுள்ளது சரியான நடவடிக்கை அல்ல. இது அரசியல் சட்டமைப்பின் அடிப்படை கட்டமைப்பை கேள்விக்குறியாக்கும் செயல். எனவே, நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற இந்த சட்ப்பேரவை முடிவு செய்துள்ளது.”


இவ்வாறு அவர் பேசினார்.