தமிழக சுகாதாரத்துறை அமைச்ச் மா.சுப்பிரமணியன். இவர் இன்று எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னணியில் இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை 4 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னேறி வருகிறது. கடந்த மாதம் 12-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 19-ந் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த மாதம் 26-ந் தேதி மூன்றாவது தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை விட கூடுதலாக 24 லட்சம் 93 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.




கடந்த 3-ந் தேதி நடைபெற்ற நான்காவது தடுப்பூசி முகாமில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் நடத்தப்பட்டு, 14 மாவட்டங்களில் மழை காரணமாக 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், சேவைத்துறை பணியாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர், மாவட்ட ஆட்சியர்களுடன் தொடர்புகொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து செய்திட அறிவுறுத்தியும், தடுப்பூசி செலுத்துவதில் உள்ள நெளிவு, சுளிவுகளை கேட்டறிந்தும், அப்பணிகளில் ஈடுபடுவோரை பாராட்டியும் உள்ளார்.


வாரந்தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். சென்னையில் 8 மருத்துவ முகாம்களுக்கு நேரடியாக முதல்வர் சென்று ஆய்வு செய்துள்ளார். இப்பணிகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மிகச்சிறப்பான ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.




கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் வதந்தியான செய்திகளை பரப்பி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணிநேரமும் ஓய்வில்லாமல் பணியாற்றி செவிலியர்கள் மிகுந்த மன உளைச்சலோடு உள்ளதாக வதந்தியான செய்திகளை பரப்பிவிடுகின்றனர். அது உண்மை இல்லை. செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் மிகச்சிறப்பான பணிகளால் தமிழ்நாட்டில் 1500க்கும் கீழ் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இருந்து வருகிறது. மாவட்டத்திற்கு மாவட்டம் மிக குறைந்த எண்ணிக்கையில் தொற்றின் அளவு இருந்து வருகிறது.


ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுவதால், மருத்துவ பணியாளர்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை அளிக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், செவிலியர்களுக்கு மாற்றுப்பணிகள் இருந்தால் அவர்கள் அந்த வாரத்தில் எந்த நாளிலாவது விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.




முதல்வர் மருத்துவத்துறையின் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்க அறிவுறுத்தியுள்ளார். தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறவர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளித்துள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 89 கோடி ரூபாய் வரை செலவாகும். கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றுவதற்கு பணியாற்றி வருகிறோம், இதனால், இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.