SETC Luxury Buses: தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் முதல்முறையாக, பென்ஸ் மற்றும் வால்வோ போன்ற சொகுசு பேருந்துகளை தனது சேவையில் இணைக்க உள்ளது.

நீண்டதூர பயணங்களுக்கான பேருந்து சேவைகள்:

நீண்ட தூர பயணங்கள் என வந்தாலே உடல் வலி மற்றும் அதீத டிக்கெட் செலவு தான் பலரது நினைவுக்கு வரும். இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில் தான், அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் நாகர்கோயில் அல்லது திருநெல்வேலியோ அல்லது அண்டை மாநிலங்களைச் சேர்ந்த திருவனந்தபுரம் அல்லது பெங்களூரோ, அந்த பகுதிகளுக்கான நீண்டதூர பயணமானது இனி சொகுசானதாகவும், குறைந்த செலவு கொண்டதாகவும் மாற உள்ளது. இதற்காக வால்வோ, பென்ஸ் மற்றும் ஈச்சர் போன்ற சொகுசு பேருந்துகளை தங்களது சேவையில் இணைக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அரசு துறையில் 20 சொகுசு பேருந்துகள்:

வரலாற்றில் முதல்முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகமானது, மல்டி ஆக்சில் கொண்ட பேருந்துகளை தனது சேவையில் சேர்க்க உள்ளது. மாநிலத்தில் தற்போது வரையில் இந்த பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், அண்டை மாநிலமான கர்நாடகாவில் ”அரிவரத் கிளப் கிளாஸ்” என்ற பெயரில் சொகுசு பேருந்துகள் அரசால் இயக்கப்பட்டு வருகின்றன. அதோடு, ஆந்திராவில் அமராவதி, கருடா, மற்றும் கருடா பிளஸ் என்ற பெயரில் வால்வோ பேருந்துகளை இயக்கப்படுகின்றன. அந்த வரிசையில் தமிழ்நாடும் தற்போது இணைய உள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஏசி வசதி கொண்ட 20 மல்டி-ஆக்சில் பேருந்துகளை தகுதியான நிறுவனங்களிடம் இருந்து வாங்க அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக வால்வோ நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது.

நோக்கம் என்ன?

சொகுசு பேருந்து கொள்முதலுக்கான டெண்டர் ஏற்கனவே வெளியாகிவிட்டதாகவும், வழக்கமான ஆக்சல் கொண்ட பேருந்துகளை காட்டிலும் கூடுதல் சொகுசு வசதிகளுடன் புதிய மல்டி ஆக்சில் பேருந்துகள் ஆண்டு இறுதிக்குள் அரசிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் வசதியான பயணம் மற்றும் குறைந்த நேர பயணத்திற்காக சற்றே அதிக கட்டணத்தை வழங்க தயாராக இருக்கும் பயணிகளை கவரும் நோக்கில் இந்த பேருந்துகளை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக தனியார் பேருந்துகள், ரயில் சேவையை நாடுபவர்களை கவர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு மற்றும் நாகர்கோயில் போன்ற தொலைதூர பகுதிகளுக்கு, சொகுசு பயணத்தை வழங்கும். வார இறுதி மற்றும் விழாக்காலங்களில் ஏற்படும் தேவையை கருத்தில் கொண்டு, 20 ஏசி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து மே மாத இறுதி முதல் இயக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

SETC சேவை விவரங்கள்:

300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இயக்கப்படும் SETC பேருந்துகளில், கடந்த 2024-25 நிதியாண்டில் (கடந்த பிப்ரவரி வரையில்),  நாளொன்றிற்கு சுமார் 72 ஆயிரத்து 553 பயணிகள் பயணித்துள்ளனர். விரைவு போக்குவரத்து கழகத்தால் 195 வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஆயிரம் திட்டமிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மாநிலத்திற்குள்ளே 90 வழித்தடங்களும், மாநிலங்களுக்கு இடையே 105 வழித்தடங்களும் அடங்கும். இதற்காக ஆயிரத்து 80 பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக அடிக்கடி பயணிப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகித சலுகையையும் SETC வழங்கி வருகிறது. ஒரு மாதத்தில் 5-க்கும் அதிகமான முறை பயணம் மேற்கொள்பவர்களுக்கு, ஆறாவது பயணத்தில் இருந்து இந்த சலுகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் 4 ஆயிரத்து 376 பயணிகள் பலன் பெற்றுள்ளனர்.

2,909 புதிய பேருந்துகள் கொள்முதல்:

இதனிடையே, புதியதாக 2 ஆயிரத்து 144 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை SETC கடந்த வாரம் வெளியிட்டது. இதில் 110 நான் ஏசி ஸ்லீப்பர் கம் சீட்டர் பேருந்துகள், 10 ஏசி சீட்டர் பேருந்துகளும் அடங்கும். அதோடு 6 போக்குவரத்து மண்டலங்களுக்கான 876 மஃப்சல் பேருந்துகளும், 260 அல்ட்ரா லோ ஃப்ளோர் எம்டிசி பேருந்துகளும் அடங்கும். தனியாக, சிஎன்ஜி திறன் கொண்ட 745 மஃப்சல் மற்றும் டவுன் பேருந்துகளுக்கு அண்மையில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு அரசு புதியதாக 2 ஆயிரத்து 909 பேருந்துகளை புதியதாக கொள்முதல் செய்கிறது.