வசூல் எவ்வளவு என்று கேட்டதற்கு அடிதடி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, பூலாங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகாந்த் ( வயது 33 ) என்பவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (28.04.2025) இரவு சவாரி முடித்து கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, முனுசாமி சாலை சந்திப்பில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது , விஜயகாந்த் அங்கு ஆட்டோவில் இருந்த அறிமுகமான தங்கம் என்பவரிடம் இன்று ஷேர் ஆட்டோ வசூல் எவ்வளவு என்று கேட்ட போது , தங்கம் என்னுடைய வசூலை நீ ஏன் கேட்க என அவதூறாக பேசியுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தங்கம் , விஜயகாந்தை கையால் தாக்கி கீழே தள்ளி , காலால் மார்பில் எட்டி உதைத்துள்ளார். காயமடைந்த விஜயகாந்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயகாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சண்முகம் ( வயது 51 ) என்பவர் R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , கொலை வழக்கில் தொடர்புடைய தங்கம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தங்கம் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் தங்கம் இன்று (30.04.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
சம்பள பணம் தராததால் , ஊழியர் செய்த செயல்
சென்னை அண்ணாநகர் 3 - வது அவென்யூ "J" பிளாக் பகுதியில் உள்ள தனியார் கார் ஷோருமில் மேலாளராக சங்கர் ( வயது 30 ) என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலே குறிப்பிட்டுள்ள கார் ஷோருமில் இருந்த Beleno Sigma மாருதி என்ற காரை RTO அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு அனுப்புவதற்காக அண்ணாநகர் 3 - வது அவென்யூ பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஷோருமில் இருந்த மேற்படி காரின் சாவியை எடுத்து 28.04.2025 அன்று காரை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கார் ஷோருமின் மேலாளர் சங்கர், K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி கார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் , அப்புலிங்க வாத்தியார் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் ( வயது 44 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி திருடப்பட்ட Beleno Sigma மாருதி கார் மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் என்பவர் மேற்படி கார் ஷோருமில் முன்பு பணிபுரிந்து வந்ததும் , சம்பள பாக்கி தராத காரணத்தினால் ஷோருமில் இருந்த கார் சாவியை திருடி காரை திருடிச் சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.