TN Govt Medical Waste Law: மருத்துவ கழிவுகள் தொடர்பாக விசாரணையே இன்றி சிறையில் அடைக்கும் புதிய சட்ட முன்வடிவு மசோதா மீது விரைவில் விவாதம் நடத்தபட உள்ளது.
மருத்துவ கழிவு சட்ட முன்வடிவு:
அண்டை மாநிலங்களில் இருந்து உயிருக்கு ஆபத்தான மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா வரும் ஏப்ரல் 29-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் மீதான உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. தொடர்ந்து வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ”நோ”.. நேரா ஜெயில் தான்..
மசோதாவில், “உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவிப்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழலுக்கு கடும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 15-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கள்ளச் சாராயம், சைபர் கிரைம், மணல் கடத்தல், பாலியல் குற்றவாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே முன்பு தடுப்பு காவல் அளிக்கப்பட்டது. இனிமேல், உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டுபவருக்கும் தடுப்பு காவல் விதிக்கப்படும். இந்த மசோதாவின்படி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி, விசாரணையின்றி தடுப்பு காவலில் வைக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேராளாவின் ஆட்டம் ஒடுங்கும்?
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து தான் லாரிகளில் அவ்வப்போது மருத்துவ கொழிவுகள் தமிழ்நாட்டு எல்லையில் கொட்டப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் கூட கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தின்பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்தது. அதுதொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அந்த மருத்துவக் கழிவுகளை கேரளா அரசே அப்புறப்படுத்த வேண்டும் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி, 20 லாரிகள் கொண்டு அந்த கழிவுகள் மீண்டும் கேரளாவிற்கே கொண்டு செல்லப்பட்டன. அதோடு, மருத்துவ கழிவுகளுக்கான குப்பைத்தொட்டியாக தமிழ்நாட்டை கேரளா பயன்படுத்தி வருவதாக பல நாட்களாகவே பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான், உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.