வெப்பமயமாகி வரும் புவியை மேலும் பலவீனமடையச் செய்யும் சக்தி பாலித்தீனுக்கு உண்டு என்கிறார்கள் அறிஞர்கள். இது இன்று, நேற்றல்ல... பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் அறிவுரை. அதிலிருந்து நாம் மீண்டோமா என்றால், இல்லை. மாறாக, பாலிதீன் பயன்பாடு அடுத்தடுத்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட பொருட்களில் மட்டுமே ஊடுருவிய பாலித்தீன், இன்று அது இல்லாத இடமில்லை என்கிற அளவிற்கு ஆக்கிரமித்து விட்டது. 


மைக்ரான் அளவுகள் எல்லாமல், மைக்ரோஓவன் அளவிற்கு மாறிவிட்டன. டீக்கடை பார்சலில் இருந்து, இட்லி மாவு வரை எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக். குடத்திற்கும், படத்திற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக்கை, வீட்டின் படுக்கை அறை வரை அழைத்து வந்தது, நாம் தான். நீர், நிலம், காற்று இல்லாமல் எவ்வாறு இருக்க முடியாதோ... அதே அளவிற்கு பாலித்தீன் இல்லாமல் இருக்க முடியாது என்கிற அளவிற்கு மனிதனின் மனநிலை மாறிவிட்டது. 


பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது, வருடம் ஒருமுறை நினைவூட்டப்படும் சாலை பாதுகாப்பு வாரம் போல மாறிவிட்டது. அரசு தரப்பில் முன்வைக்கப்படும் விழிப்புணர்கள் எல்லாம், கட்டாய ஹெல்மெட்  கடைபிடிப்பது போல கடந்து விடுகிறது. பிளாஸ்டிக் விவகாரத்தை பொருத்தவரை, அரசு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதுவும் வேண்டும் தான். ஆனால், அடக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, வெறும் விழிப்புணர்வு மட்டும் போதுமா? அடக்குவது என்றால், பொதுமக்களை அடக்குவது இல்லை! பாலித்தீன் தயாரிப்பை அடக்குவது.  தயாரிப்பை முடக்குவது. அது அரசால் மட்டுமே முடியும். 


வெறுமனே தடை என்றதோடு இல்லாமல், சட்டங்களை கடுமையாக்க வேண்டும். ஒவ்வொரு அரசு பொறுப்பேற்கும் போதும், பிளாஸ்டிக், பாலித்தீன் ஒழிப்பை முன்னெடுக்கிறார்கள். ஆனால், அதை முன்னோக்கி எடுப்பதில்லை. மாற்றை பயன்படுத்த கூறுகிறார்கள்; பயன்பாட்டில் இருப்பதை ஒழிப்பதில்லை. இது தான் அடிப்படையில் சிக்கலாகிறது. 2018 ஆகஸ்ட் 23 ல் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” என்ற இயக்கத்தை தொடங்கிய அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதன் தூதுவராக நடிகர் விவேக்தை நியமித்து, நெகிழி இல்லா பைகளை அறிமுகம் செய்தார். அதே போல 2019ல் வெள்ளை நிறை பையை வெளியிட்டு, துணிப்பையை பயன்படுத்துங்கள் என்றார்கள்.






 


இன்று திமுக அரசு, மஞ்சள் பையை அறிமுகம் செய்து, மீண்டும் மஞ்சப்பைக்கு மாறுங்கள் என்கிறார்கள். நோக்கம் சரி தான், ஆனால் அது மட்டுமே போதாதே!





குட்காவிற்கு எதிராக செயல்படுவது போல, கஞ்சாவுக்கு  எதிராக செயல்படுவது போல, லாட்டரிக்கு எதிராக செயல்படுவது போல, மாநில எல்லையில் வெளிமாநில மதுவை தடுப்பது போல பாலித்தீன் வருகையை தடுக்க வேண்டும். தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அப்போது தான் பாலித்தீன் பாஃய் பாஃய் ஆகும். இல்லையேல்... தடை என்கிற சாட்டையை சுழற்றாத வரை ஒவ்வொரு காலகட்டத்திலும், வெள்ளை பைகளும், மஞ்சை பைகளும்... விழிப்புணர்வு வாசகங்களோடு வந்து கொண்டே இருக்கும்.