TN Govt kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
கலைஞர் மகளிர் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு, தமிழ்நாடு அரசு மாதம் ரூ.1000 ரூபாயை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் இணைய தகுதியான கூடுதல் பெண்களை இணைக்கும் நோக்கில், அடுத்த மாதம் 15ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, திட்டத்திற்கான விதிகளில் சில திருத்தங்கள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உரிமைத்தொகை திட்ட விதிகளில் தளர்வுகள்:
- இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதி அடைகின்றனர்
- பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்
- அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், அவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
- வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன். கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர். திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசு விதிகளை தளர்த்தியுள்ளது.
ஏன் தளர்வுகள்?
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி மிகவும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இந்த திட்டம் தாமதமாகவே பயன்பாட்டிற்கு வந்ததோடு, அனைத்து மகளிருக்கும் என்பது தகுதியான மகளிருக்கு மட்டுமே ரூ.1000 என மாறியது. இதனால் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. தொடர்ந்து, அதனை சமாளிக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி, கலைஞர் மகளிர் திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும், மீண்டும் வென்று ஆட்சியை வசப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். அதன்காரணமாகவே, உங்களுடன் ஸ்டலின் என்ற நிகழ்ச்சி மூலம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக வரும் 15ம் தேதி மூலம், புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம், பெண்களின் வாக்குகளை அதிகம் கவர முடியும் என திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.