தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதன்முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவை மரபுப்படி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து கலைவாணர் அரங்கம் வந்தார்.
பின்னர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழில் காலை வணக்கம் என்று தனது உரையைத் தொடங்கினார். மேலும், எளிமையாக வாழுங்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுரை கூறினார். பின்னர், இந்த கூட்டத்தொடரில் பேசினார். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அதிகம் கவனிக்கப்பட்ட மத்திய, மாநில அரசுகள் இடையேயான உறவு குறித்து தன்னுடைய உரையில் தெளிவுபடுத்தினார் ஆளுநர்.
அதில்,''மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்த அரசு உறுதியாக உள்ளது.வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில் உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்ற கொள்கைக்கு ஏற்ப நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக ஒன்றிய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்’’ எனத் தெரிவித்தார்.