தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய தேவையில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்” என ஆளுநர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது” என ஆளுநர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 






வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு 


முன்னதாக, நேற்று  முன்தினம் திருப்பூர் மாநிலத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவரை யாரோ  கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தி பரவியது.  இதனால் திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே  காவல் நிலையம் முன்பாக குவிந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடந்தது விபத்து என விளக்கமளித்தனர். இதனால் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. 


அதற்குள் தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் வெளியாகி வைரலானது.  இதன் காரணமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள் எனவும் தகவல் பரவியது. ஆனால் துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறை வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இதுவரை போலி செய்திகள் பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலாளர் இறையன்பு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள் என்று கடும் கண்டனம் தெரிவித்தார். 


மேலும் வேலை வாய்ப்புத் தேடி தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் அடிப்படை வசதிகளும்,, தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய சலுகைகளையும் அரசு செய்து தருவதாகவும் கூறினார். அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் நடந்து கொள்வதாகவும் தனது அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.