TN Governor Calls CM Stalin: ”வாங்க பேசலாம்” - மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு

TN Governor Calls CM Stalin: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

Continues below advertisement

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து முதலமைச்சரை ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்த பிறகு சந்தித்து பேசலாம் என, அரசு தரப்பில் ஆளுநருக்கு பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் வழக்கு:

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும் அரசுக்கும் இடையேயான உறவு என்பது ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி நீண்டகாலமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதை கூறலாம். இதையடுத்து தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்ற கருத்தும்:

கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும். தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் விளைவாக தான் மசோதாக்கள் தொடர்பாக் ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழ்நாடு அரசு கூடுதல் மனு:

இதனிடையே தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த கூடுதல் திருத்த மனுவில், “கடந்த நவம்பர் 18-ஆம் தேதி தமிழக சட்டப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை, ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Continues below advertisement