ஆளுநர் அமைத்த தேடுதல் குழு தொடர்பான அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் என, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


பொன்முடி எதிர்ப்பு:


ஆளுநர் தேடுதல் குழு அமைத்து இருப்பது குறித்து பேசிய அமைச்சர் பொன்முடி, “3 பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை ஆளுநர் ஆர்.என். ரவி தன்னிச்சையாக நியமித்துள்ளார். ஆளுநரால் அமைக்கப்பட்ட தேடுதல் குழு பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு எதிரானது.  அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். எனவே, ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும். மேலும், பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை” எனவும் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். 


ஆளுநர் அமைத்த தேடுதல் குழுக்கள்:


முன்னதாக சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முதன்முறையாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில், தேடுதல் குழுவில் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்திய நாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.


மாற்றம் என்ன?


வழக்கமாக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். 3 பேர் கொண்ட தேடுதல் குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான 3 நபர்களை ஆளுநருக்கு பரிந்துரை செய்யும். அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் நிபந்தனை விதித்துள்ளதாக அண்மையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.  அதோடு, தேடுதல் குழுவில் யு.ஜி.சி-யின் பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.  இந்நிலையில் தான், சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான 4 பேர் அடங்கிய தனித்தனிக் குழுக்களை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். 


யு.ஜி.சி. உறுப்பினர்:


தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் தரப்பில் யு.ஜி.சி. பிரதிநிதி ஒருவரும் இந்த தேடுதல் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, சென்னை பல்கலைக்கழகத்திற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி பிரதிநிதியாக தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஹெச்.சி.எஸ் ரத்தோர் சேர்க்கப்பட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழக தேடுதல் குழுவில் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பி. திம்மே  கவுடாவும் யு.ஜி.சி பிரதிநிதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.  இதேபோன்று, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி உறுப்பினர் பேராசிரியர் சுஷ்மா யாதவாவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.