சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எனக் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளம் தொடங்கி வெகுஜன ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாக மாறியது. இது தொடர்பாக ஆளுநர் ரவி இன்று அதாவது, ஜனவரி 27ஆம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.
தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு உத்வேகம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என ஆவணங்களின் அடிப்படையில்தான் கூறினேன் என தெரிவித்துள்ளார்.
சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசிய ஆளுநர், “நம்முடைய வரலாற்றை எப்போதும் நாம் மறந்துவிடக்கூடாது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களை நாம் நினைவில் வைக்க வேண்டும். நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருக்காது.
ஆனால் நாம் நன்றி உடையவர்களாக இல்லை. தேசம் நன்றியுடைய மக்களைக் கொண்டிருக்கவில்லை. இந்திய தேசத்துக்கு நேதாஜி அளித்த பங்களிப்புகள் குறித்த வரலாற்றை, பெருமையுடன் நாம் மீட்டெடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது. இதற்காகத்தான் தற்போது ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.