விழுப்புரம் : காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் எனவும் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்து அறிவிப்பேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் டி டி வி தினகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் “எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அதிமுக பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறும் எதுவும் தெரியாது ஆட்சி பொறுப்பில் அமர்த்தியவர்களுக்கு, தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் அவர் என்பதால் தமிழக மக்கள் யாரும் அவரை நம்ப மாட்டார்கள்” என தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் என கூறினார். அமமுக எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்றும் அம்மாவின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதில் துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியை பார்த்து பயப்படுகிறார் என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்தால் ஆட்சி அமைக்க தமிழகத்தில் முடியாது என தான் முன்பே தெரிவித்ததாகவும், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பாஜக போன்ற பல்வேறு கூட்டணி கட்சிகளையும், பணத்தையும் வைத்துகொண்டு வெற்றி பெற முடியவில்லை எலி வலையானாலும் தனிவலையாக கொண்டு அமமுக கம்பீரமாக செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும் இந்த இயக்கத்தினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என கூறினார்.
அதிமுக பழனிச்சாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் கொதித்து போய் திமுகவிற்கு வாக்களித்துள்ளதாகவும் குடும்பத்திற்காக உழைக்கிற கட்சி திமுக உள்ளதால் மாற்று கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதால் அமமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.