தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைத்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 14-இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். தமிழ்நாடு அரசின் கடந்த 10 ஆண்டுகால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட உள்ளார்.120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. வருவாய் இழப்பிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும். மேலும், கடன் விவரங்கள் மற்றும் வருவாய் இழப்புக்கான காரணங்கள் உள்ளிட்டவையும் வெள்ளையறிக்கையில் இடம்பெறும்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், பட்ஜெட் தாக்கல் குறித்தும், துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பட்ஜெட் வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.
வெள்ளை அறிக்கையும் எதிர்க்கட்சிகளும்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வெள்ளை அறிக்கை மட்டும் போதுமா? அல்லது அதனுடன் சேர்ந்து பச்சை, மஞ்சள் அறிக்கையுடன் வெள்ளரிக்காயும் சேர்த்து கொடுப்போம் என தெரிவித்திருந்ததை அவ்வுளவு விரைவில் மறந்திருக்க முடியாது.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
வெள்ளை அறிக்கை என்ற பெயர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். வெள்ளை அறிக்கை என்பது ஒரு ஜனநாயக கருவி எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வெள்ளை அறிக்கையை அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட முடியாது.
வெள்ளை அறிக்கை என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றியோ அல்லது பிரச்னைகள் பற்றியோ முழுமையாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாகும். இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட சிக்கல் குறித்தோ அல்லது பொருள் குறித்தோ நிபுணரின் தீர்வும் பரிந்துரையும் கொண்டதாக இருக்கும். ஒரு சிக்கலை புரிந்து கொள்ளவோ, சிக்கலை தீர்க்கவோ, அல்லது முடிவெடுக்கவோ வெள்ளை அறிக்கை வழிவகை செய்கிறது