கடந்த 2 வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட சில மாதங்கள் வெங்காயம், தக்காளி ஆகிய அத்தியாவசிய காய்கறிகளின் வரத்து குறைந்து விலையானது கிடுகிடுவென உயரும். இதனால் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தும். இதனை தடுக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்கதையாக நடந்து தான் வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்கள் முன்பு தான் வெங்காயம் விலை உயர்ந்து, அதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தது.


இதனைத் தொடர்ந்து வரத்து அதிகரிப்பு, சீரான விலை என சென்று கொண்டிருந்த வெங்காயத்திற்கு மீண்டும் சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெங்காய உற்பத்தியை பொறுத்தவரை மகாராஷ்ட்ரா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ராவில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 7 ஆயிரம் டன் வரத்து இருந்தால் விலையுயர்வு சீராக இருக்கும். வரத்து குறைய தொடங்கினால் அவ்வளவு தான்  வெங்காயம் விலை மீண்டும் ஏறத்தொடங்கி விடும். 


அப்படியான நிலை தான் கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. பல்லாரி என சொல்லப்படும் பெரிய வெங்காயம் நகர்புற பகுதியில் கிலோ ரூ.100க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். உடனடியாக தமிழ்நாடு அரசு வெங்காயம் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் வெங்காயம் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அதன்படி வெளியாகியுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்து வருகிறது. பொதுமக்களுக்கு நியாயமான விலையில் வெங்காயத்தினை விற்பனை செய்திட தமிழ்நாடு அரசு வெங்காயத்தின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.


 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படையாமல் இருக்க எளிய கூட்டுறவுத்துறையின் மூலமாக முதற்கட்டமாக சென்னையில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 4 நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று முதல் (05.11.2023)வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது.


தற்பொழுது உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கூட்டுறவுத்துறையின் மூலமாக பண்ணை பசுமை காய்கறி கடைகள் மூலம் கிலோ ஒன்றிற்கு ரூ.30/- வீதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள பிற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது” என  கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.