தண்ணீரில் மிதக்கும் காஞ்சிபுரம்.. ஒரு மணிநேரத்தில் இவ்வளவு மழையா? இடி தாக்கி ஒருவர் உயிரிழப்பு..
தண்ணீரில் மிதக்கும் காஞ்சிபுரம்.. ஒரு மணிநேரத்தில் இவ்வளவு மழையா? இடி தாக்கி ஒருவர் உயிரிழப்பு..
கிஷோர் Updated at:
05 Nov 2023 09:36 PM (IST)
Kanchipuram Rain : கடந்த ஒரு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டர் கனமழையும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் தல 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது
காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய திடீர் கன மழை. இடியுடன் கூடிய கனமழையால் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயி இடி தாக்கி பலியாகியுள்ளார்.
கனமழை
காஞ்சிபுரம் : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் காலை முதலே காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் காய்ந்து வந்த நிலையில் மதிய நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பயங்கர இடி சத்தத்துடன் கனமழை பெய்ய தொடங்கியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீ பெரும்புதூர் ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது
சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
கடந்த ஒரு மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 5 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. திடீர் மழையின் காரணமாக மேட்டு தெரு, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், பேருந்து நிலையம், ரயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் ஓட்ட முடியாமல் அங்கேயே இறங்கி தள்ளி விட்டும், முழங்கால் அளவிற்கு நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி.
இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் காஞ்சிபுரம் அடுத்த கரூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபொழுது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான முனுசாமியை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.