முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் இந்தியாவில் வேளாண்மை துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அவரது ஆட்சியில் வேளாண்மைத்துறை என அதுவரை அழைக்கப்பட்ட துறையின் பெயர் வேளாண்மை -உழவர் நலத்துறை என மாற்றம் செய்யப்பட்டது. 


இதனிடையே வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் இருந்தே விவசாயிகள் மேல் இருந்த அன்பால் பல சிறப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். இதனால் வேளாண் உற்பத்தி அதிகரித்து உழவர்களின் வளம் பெறுவதோடு தமிழ்நாடும் உணவு உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 


மேலும் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வேளாண் தொழிலுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  24 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.4,366 கோடி இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் பெற்று தந்துள்ளார். 


அதேசமயம் மழை, வறட்சி போன்ற பேரிடர்களால் ரூ.582 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு 8 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பேரிடர் பயிர் காப்பீட்டு தொகையான ரூ.4,342 கோடியால் 24.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகை கடனாக ரூ.600 கோடி வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,163 டிராக்டர்கள், 9.303 பவர் டில்லர்கள், 288 அறுவடை இயந்திரங்கள், 2,868 பிற விவசாய கருவிகள் என மொத்தமாக 16,432 கருவிகளை ரூ.270 செலவில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது . முதல்முறையாக ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியத்தில் நுண்ணீர் பாசன வசதி அமைக்க ரூ.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


100 உழவர் சந்தைகள் ரூ.27.5 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு 10 புதிய உழவர் சந்தைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் 25 சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் வேளாண் பல்கலைக்கழகம், உணவு தானிய உற்பத்தி அதிகரிப்பு, குறுவை சாகுபடியில் 48 ஆண்டுகளில் இல்லாத சாதனை, விவசாயிகளுக்கான தார்பாய் வழங்குதல், ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம், சிறுதானிய இயக்கம், பயறு பெருக்க திட்டம், தென்னை சாகுபடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என ஒவ்வொரு நிகழ்விலும் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்குகிறது. 


முதலமைச்சர் ஸ்டாலினின் சீர்மிகு திட்டங்களால் வேளாண்மை துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அண்டை மாநிலங்களுக்கும் உணவு பொருட்களை வழங்கி இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.