தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பின் டோக்கன் எந்தெந்த நாட்களில் விநியோகம் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
மக்களை கவர்ந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் நடப்பாண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
பணம் கொடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதில் பல பொருட்கள் தரமில்லாததாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்கள் கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் 2023 பொங்கலுக்கு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது.
டோக்கன் விநியோகம் எப்போது?
அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 4 வரை பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் எந்தெந்த தேதிகளில், எந்த நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை ஜனவரி 2 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.