தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்காவை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா எப்போது வருகிறது.?
இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு மினி டைடல் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்காவை அமைக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை டெண்டர் கோரியுள்ளது. இந்த மினி டைடல் பூங்கா, 34 கோடி ரூபாய் செலவில் 4 தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த மினி டைடல் பூங்காவின் கட்டுமானப் பணிகளை ஓராண்டில் முடிக்க தமிழ்நாடு அரசின் தொழில்துறை திட்டமிட்டுள்ளது.
இதனால், திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஐ.டி துறை படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும், டைடல் பூங்கா உருவாகும் பட்சத்தில், அந்த சுற்றுவட்டாரப் பகுதியே மேம்படுவதுடன், பல்வேறு தொழில்களும் அங்கு உருவாகி, ஏராளமானோருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உருவாகும்.
இந்த செய்தியால், திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.