அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழக அரசால் இயக்கப்படும் வெகு தூர பேருந்து சேவை துறையாகும். இத்துறை சென்னையை தலைமை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. 300 கிலோமீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள வழித்தடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு பேருந்துகளில் ஏழு வகையான பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. Non AC seater, Non AC Seater(Ultra Deluxe), Non AC sleeper, AC sleeper,AC seater, AC seater cum sleeper, TNSTC economic AC bus என வெவ்வேறு வசதிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தற்போது புதிதாக ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய திட்டம் அறிமுகம் :
பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது லக்கேஜ் அதிகமாக எடுத்துச் சென்றால், அதற்கு தனியாக கட்டணம் வழங்கப்படும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரியர் சர்வீஸ் போலவே பேருந்துகளில் பொருட்களை மட்டும் பார்சல் அனுப்பும் முறை கொண்டுவரப்படவுள்ளது. அரசு விரைவு பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பிற ஊர்களில் வணிகம் செய்ய ஏதுவாக, அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. குறைந்த நேரத்தில் விரைவாக பொருட்களை இத்திட்டம் அனுப்பிட வழிவகை செய்யும். இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அருகில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதில் பொதுமக்கள் விவசாயிகள் வணிகர்கள் மற்றும் முகவர்கள் தினசரி பொருட்களை இரு ஊர்களுக்கு இடையே அனுப்பிவிடும் வகையில் பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிக்கு மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி பொருட்களை பார்சல் அனுப்பிக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வணிகம் செய்யும் பொருட்களையும், பிற பொருட்களையும் பிற ஊர்களுக்கு அனுப்புவதற்கு தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே லாரி சேவைக்கு இணையாக செயல்பட உள்ளது இந்த புதிய திட்டம். வரவிருக்கும் இந்த புதிய திட்டத்தால் லாரி மற்றும் பார்சல் சேவைகள் பாதிக்கப்படுமா?" என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.