பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக் கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் நடப்பாண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 


பணம் கொடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதில் பல பொருட்கள் தரமில்லாததாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்கள் கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது.






 இந்நிலையில் 2023 பொங்கலுக்கு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  


ஆனால் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது மக்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விவசாயிகள், எதிர்கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக்கரும்பு  இடம் பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்  2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை  ஜனவரி 2 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 9 ஆம் தேதிக்கு நிகழ்ச்சியானது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.