தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில்,  பொதுமக்கள் ஆர்வமுடன் அதனைப் பெற காத்திருக்கின்றனர். 


தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு 


பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்தாண்டுபணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.


இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில், பொருட்களும் தரமில்லாமல் வழங்கப்படதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


டோக்கன் விநியோகம் 


கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் வீடு, வீடாக தொடங்கியது. தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு பரிசுப்பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைவார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் 


பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் போர் நினைவுச் சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள ரேசன் கடைக்கு சென்று இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் எம்பிக்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மாநிலத்தின் மற்ற  இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பொங்கல் பரிசு பெறுவது எப்படி?


பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு  முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால்  புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில், அதனை பெற முடியாதவர்கள் ஜனவரி 16 ஆம் தேதி  பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.