Women Police: தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள்  இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக அரசு, சிறப்பு பதக்கம் வழங்க முடிவு செய்துள்ளது.


காவல்துறையில் பெண்கள்:


தமிழக காவல்துறையில் தற்போது 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். இதில் பெண் போலீசாரும் உள்ளனர். 1973ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் தமிழக காவல் துறையில் பெண் காவலர்களின் முதல் காலடித்தடம் பதிந்தது. அவர் தொடங்கி வைத்த பெண் காவலர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்து இன்று ஆண் காவலர்களுக்கு இணையாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார்கள். 1973ல் முதன் முதலாக காவல்துறையில் பெண் காவலர்களை சேர்த்தபோது, ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக் காவலர், 20 காவலர்கள் அடங்கிய சிறிய படைதான் இருந்துள்ளது. அந்த பெண் காவலர் படைக்கு உதவி ஆய்வாளராக தலைமை தாங்கும் பொறுப்பை உஷாராணி பெற்றார். 


முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி:


இதனை தொடர்ந்து, 1976ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாக  திலகவதி தேர்வு பெற்று சாதனை படைத்தார். அதேபோல, தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை பெற்றவர் லத்திகாசரண் பெற்ற நிலையில், இவரே முதல் பெண் காவல் ஆணையராகவும் இருந்தார். இந்த பெருமையை லத்திகாசரணுக்கு வழங்கியவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இதனை அடுத்து,  1992ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் சென்னை ஆயிரம் விலக்கு பகுதியில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.  இப்படி சிறிது சிறிதாக உயர்ந்த பெண் காவலர்கள், தமிழகத்தின் அனைத்து காவல் பிரிவுகளிலும் நிரம்பி இருக்கின்றனர்.  1973ஆம் ஆண்டு 22 பேருடன் தொடங்கப்பட்ட பெண் காவலர்கள் படை தற்போது 35 ஆயிரத்து 329 பேருடன் தலை நிமிர்ந்து நிற்கியது.   ஒரு டிஜிபி, 2 கூடுதல் டிஜிபிக்கள், 14 ஐஜிக்கள் இந்த பெண் காவலர் படையில் உள்ளனர்.


50 ஆண்டுகள் நிறைவு:


இந்நிலையில், பெண் காவலர்களை கவுரவிக்கவும், அவர்கள் காவல் பணிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழகத்தில் பணியில் உள்ள காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான அனைத்து பெண் போலீசாருக்கும் சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு  முடிவு செய்துள்ளது.  இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, ரயில்வே காவல், சிபிசிஐடி, சிறப்பு காவல் படை, முதல்வரின் பாதுகாப்பு படை என அனைத்து பிரிவுகளிலும் பெண் போலீசார் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததுவிட்டது. இதை கவுரவிக்கும் வகையில் சிறப்பு பதக்கம் வழங்குவது அனைவருக்கும் பெருமை. இது பெண்கள் முன்னேற்றத்திற்கு மேலும் உந்துதலாக இருக்கும்" என்றனர்.




மேலும் படிக்க


Ayudha Pooja: 7 லட்சம் பேர் பயணம், சந்தைகளில் குவியும் மக்கள்! களைகட்டத் தொடங்கிய ஆயுதபூஜை கொண்டாட்டம்!